Designed by Enthan Thamizh

தர்மராஜா தலைகுனிந்தார் ! !படித்ததில் பிடித்தது.


பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவ்விட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள். தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்துவிட்டீர்களே,'' என ஆச்சரியமாகக் கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, ""எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை,'' என அலட்சியமாக சொல்லிவிட்டு போய்விட்டாள். அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன்.
அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர். கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,'' என்றார்.
மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை. "கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை.
எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை.
எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன்,'' என்றார்.
தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா. தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலைகுனியத்தான் வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக