நமது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு.
தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.
தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.
சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு' என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்' எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.
வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும்.
நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.
""தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக