பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
அடியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை தர விரும்பாமல் விடியற்காலை வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார்.
நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.
தயங்கி நிற்கிறார்...... அனைவரும் "அதை" மறந்துவிட..
அணுக்கோட்பாடுகளையே நினைவில் இருத்திய இவருக்கா அது மறந்து விடும்?
"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால்,
ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!
நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.
கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.
அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை!
இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!
அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
இங்க வாங்க-னு அர்ச்சகரை அருகில் அழைத்து...
வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது,
நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்!
நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...
ஈயாடவில்லை ஒருவர் முகத்திலும்; இதெல்லாம் இவருக்கு எப்படித் தெரியும் என்ற வியப்பாய் ஆளுனர் பர்னாலாவும்; இதையெல்லாம் நாம கூடச் செய்யலையே என்ற திகைப்புடன் முதலமைச்சர் நாயுடுகாருவும்..
தன் பையிலிருந்து 600 ரூபாய் குடுத்து மூன்று அர்ச்சனை சிட்டுகள் வாங்கிவரச் செய்து; குடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னாராம்.
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம்.
இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா?
அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!
பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி,
தேசபக்தர்,
மனித நேயர்,
நல்ல மேலாளர்,
கல்வியாளர்,
குழந்தைப் பாசம் கொண்டவர்,
எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர்,
குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
அவர் ஓய்வு பெறும் இந்த வேளையில்....அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை
இல்லை அவரது உடலுக்கு விடைகொடு விழா!
வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
வாழ்கநின் புகழ் வாழ்க!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக