Designed by Enthan Thamizh

ஆசாரக் கோவை நூலின் பெருமை

ஆசாரம், கோவை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து ஆசாரக்
கோவை என்று ஆயிற்று. ஆசாரம் வடமொழி; கோவை தமிழ்ச் சொல்.
ஆசாரம் என்றால் பின்பற்றக் கூடியவை; கோவை என்றால் தொகுப்பு.
பின்பற்றக் கூடிய ஒழுக்கங்களைத் தொகுத்துக் கூறுவது என்பதே ஆசாரக்
கோவை என்பதன் பொருள்.

இன்ன காரியங்களைச் செய்; இன்ன காரியங்களைச் செய்யாதே; என்று
கட்டளையிடும் நூல்களுக்கு வடமொழியிலே ஸ்மிருதிகள் என்று பெயர்.
இந்த ஆசாரக் கோவையும் ஒரு ஸ்மிருதி போலவே காணப்படுகின்றது.
இன்னின்ன செயல்கள் செய்யத்தக்கவை; இன்னின்ன செயல்கள்
செய்யத்தகாதவை; என்று கண்டிப்பாக உத்தரவு போடுவதுபோலவே பல
பாடல்கள் காணப்படுகின்றன.

வடமொழி ஸ்மிருதியில் உள்ள பல கருத்துக்களை இந்நூலிலே
காணலாம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல்
ஆதலால் இதில் கூறப்படும் ஒழுக்கங்களிலே சிலவற்றை இக்காலத்தார்
பின்பற்ற முடியாமலிருக்கலாம்.

வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளிலே இன்னின்ன வருணத்தார்,
இன்னின்ன ஆசாரங்களைப் பின்பற்றவேண்டும் என்று சொல்லப்
பட்டிருக்கின்றன. இந்த ஆசாரக் கோவையிலே சாதிக்கொரு நீதியென்று
பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள் அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்றவேண்டும் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பு.

சாதிக்கொரு நீதி கூறும் முறையைத் தமிழ் நூலார் பின்பற்றவில்லை.
பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த எல்லா நீதி நூல்களும் பெரும்பாலும்
எல்லோர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றன; அறங்களையே
அறிவிக்கின்றன. ஒரு சில பாடல்களில் மட்டும், அந்தணர், அரசர், வணிகர்,
வேளாளர் கடமைகளைத் தனித்தனியே வலியுறுத்துக்கின்றன.

ஆசாரக்கோவையை ஒரு பொதுச் சுகாதார நூல் என்றே
சொல்லிவிடலாம். எல்லா மக்களும் நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி?
ஊரும், நாடும், பொது இடங்களும் சுகாதாரக் கேடின்றி இருப்பது எப்படி?
என்பவைகளை இந்நூலிலே காணலாம். புறத்திலே தூய்மையுடன் வாழ்வதற்கு வழி கூறுவதோடு மட்டும் நின்று விடவில்லை. அகத்திலே அழுக்கின்றி வாழ்வதற்கும் வழி காட்டுகின்றது இந்நூல். இது இந்நூலுக்குள்ள பெருமை.

இந்நூலாசிரியர் பெயர் பெருவாயின் முள்ளியார் என்பது. இவர்
வடமொழியிலும் புலமையுள்ளவர். ஆயினும் இவர் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் அதிகமாகக் கலக்கவில்லை; வெண்பாக்கள் நீரோட்டம் போலவே சரளமாக அமைந்திருக்கின்றன. இரண்டடி முதல் ஐந்தடி வரையில் உள்ள வெண்பாக்கள் இதில் காணப்படுகின்றன. ஆசாரக் கோவையில் உள்ள
வெண்பாக்களின் எண்ணிக்கை நூறு.

ஆசாரத்திற்கு விதை

மக்களுடைய நல்லொழுக்கங்களுக்கு அடிப்படையான குணங்கள்
இவைகள்தாம் என்று முதற் பாட்டிலே கூறப்படுகின்றது. ''ஆசாரத்திற்கு
விதை எட்டுக் குணங்கள்; அவைகளைப் பின்பற்றுவோரே ஒழுக்கந் தவறாமல் வாழ முடியும்; அவைகள் தாம் நல்லொழுக்கத்தை வளர்க்கும்'' என்று விளம்புகிறது அச்செய்யுள்.

''நன்றி அறிதல்; பொறை உடைமை; இன்சொல்லோடு;
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை; கல்வியோடு;
ஒப்புரவு ஆற்ற அறிதல்; அறிவுடைமை
நல்இனத்தாரோடு நட்டல்; இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து.

பிறர் தனக்குச் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்; அறியாமை
காரணமாகப் பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது; யாரிடமும்
கடுஞ்சொற் கூறாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுதல்; எந்த
உயிர்களுக்கும் அவை வருந்தும்படி தீமை செய்யாதிருத்தல்; சிறந்த
கல்வியை மறக்காமல் கற்றல்; உலக நடையை அறிந்து அதைத் தவறாமல்
பின்பற்றுவது; எதைப்பற்றியும் தானே சிந்தித்து உண்மை காணும்
அறிவுடைமை; கல்வி, அறிவு, நல்லொழுக்கமுள்ள கூட்டத்தாரோடு சேர்ந்து
வாழ்தல்; ஆகிய இந்த எட்டுக் குணங்களும் நல்லொழுக்கத்தை வளரச்
செய்யும் விதைகளாகும்.'' (பா.1)

இந்த எட்டுப் பண்புகளையும் பெற்றவர்கள் எந்நாளும் சிறந்து
வாழ்வார்கள். இது எக்காலத்திற்கும் ஏற்ற உண்மையாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக