ப்ரூனோ என்று ஒரு துறவி இருந்தார்.
ஓர் இரவு மழை பெய்து ஓய்ந்திருந்தது. அப்போது ப்ரூனோ ப்ரார்த்தனை செய்யும்போது தவளைகளின் சப்தம் காதை பிளந்தது. அவரால் ப்ரார்த்தனையில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஜன்னல் அருகில் போனார். "எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க! நான் கடவுள்கிட்டே ப்ரார்த்தனை செய்துகிட்டு இருக்கேன்" என்று கத்தினார்.
பெரிய துறவி ஆச்சா?
எல்லா தவளைகளும், ஏன், எல்லா உயிரினங்களும் உடனே சப்தமிடுவதை நிறுத்திவிட்டன.
எங்கும் ஒரே நிசப்தம்! துறவி மீண்டும் ப்ரார்த்தனையை ஆரம்பித்தார். ஆனால் உள்ளிருந்து ஒரு குரல் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. "உன் ப்ரார்த்தனையை விட தவளைகளின் சப்தம் இழிந்தது என்று நினைக்கிறாயா என்ன? ஏன் அப்படி? கடவுளுக்கு அதுதான் பிடித்து இருக்கிறதோ என்னமோ!"
"என் ப்ரார்த்தனையைவிட தவளை சப்தத்தில் மகிழ்ச்சி தரக்கூடியது என்ன இருக்கிறது?"
"கடவுள் அந்த சப்தத்தை ஏன் படைத்தார் என்று நினைக்கிறாய்?"
ஏன் என்று கண்டு பிடிக்க முடிவு செய்தார் ப்ரூனோ.
ஜன்னலைத் திறந்து "பாடுங்கள்" என்று கட்டளை இட்டார். தவளைகள் தம் கானத்தை ஆரம்பித்தன.
கேட்க கேட்க அவை ஒன்றும் மோசமாகப் படவில்லை. உண்மையில் அவற்றை வெறுக்காமல் இருக்கும்போது அவை மோனத்துக்கு தடையாகவில்லை.
அத்துடன் ப்ரூனோவின் மனம் ப்ரபஞ்சத்துடன் ஒருங்கிசைந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக ப்ரார்த்தனையை சரியாக இனம் கண்டு கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக