Designed by Enthan Thamizh

லாட்விய மொழியில் திருக்குறள் அசத்தும் ஐரோப்பிய மருமகள்

காதில் கம்மல், கழுத்தில் 'ஓம்' டாலர் சகிதம் சுடிதார் காஸ்ட்யூமில், ''ஐ லவ் டேமில்நாடு'' என்றபடியே வரவேற்கிறார் ஆஸ்ட்ரா! லாட்வியா நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை லாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், லாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை!

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே லாட்வியாவுல! ரஷ்யாவுக்குப் பக்கத்துல இருக்கிற குட்டி நாடு எங்களோடது. மொத்தமே 20 லட்சம் மக்கள்தான். இதுல, தலைநகர் ரீகாவுல மட்டும் பத்து லட்சம் பேர் இருப்பாங்க. அங்க, பொலிடிக்கல் சயின்ஸ் படிச்சிட்டு, வெளியுறவுத் துறையில வேலை பார்த்திட்டு இருந்தேன். அப்போதான் இவரைச் சந்திச்சேன். காதலிச்சு கைப்பிடிச்சேன்!'' என தனது காதல் கணவர் கரிகாலனை கைகாட்டித் தொடர்கிறார் ஆஸ்ட்ரா.

''எங்க வீட்டுக்குப் பக்கத்துல இவரோட வீடு இருந்துச்சு. எனக்கு இந்தியர்கள் மீது ரொம்ப மரியாதை. ஏன்னா, இந்தியாவைப் பத்தி நிறைய நல்ல விஷயங்களைப் படிச்சிருக்கேன். இங்க மக்கள் பேசற வெவ்வேறு மொழிகள், யோகா, கோயில்கள்னு எல்லாம் பற்றியும் நெட்ல படிச்சிருக்கேன். குறிப்பா, தமிழ்நாடு... இங்க தனித் தமிழ் இயக்கம், மொழிப் போராட்டம் இதெல்லாம் எனக்குப் பரிச்சயமாச்சு.

பழமையான மொழியைப் பேசற ஒவ்வொரு இனமும் தங்கள் மொழியைக் காப்பாத்த இப்படி போராட்டங்கள் நடத்திய வரலாறு இருக்கு. இது மாதிரியே லாட்வியாவிலும் 'தூய்மை லாட்வியம்'னு ஓர் இயக்கம் 1900களில் நடந்திருக்கு. இப்பவும் நாங்க எங்க மொழியில் மற்ற மொழி வார்த்தைகளைக் கலக்கறதில்லை. எங்க நாட்டுக்கும் பொதுவான கரன்சி யூரோ. அதைக் கூட எங்க மொழியில எப்படி சொல்லலாம்னு இப்போ விவாதம் நடத்திட்டு இருக்காங்க. எங்களைப் போலவே மொழியை நேசிக்கிற தமிழர்களோட நான் என்னை ரொம்ப நெருக்கமா உணர்றேன்.

நான் ரோமன் கத்தோலிக்கா இருந்தாலும், தமிழ்ப் பண்பாட்டு ஈர்ப்பால எல்லாக் கோயில்களுக்கும் போவேன். காஞ்சிபுரம் கோயில்களைப் பார்க்கும்போது பிரமிப்புல கண் கலங்கிடுச்சு. அவ்வளவு அழகு! அப்புறம், இவரோட லண்டன்ல அஞ்சு வருஷம், கொழும்புல மூணு வருஷம்னு வாழ்க்கை போச்சு. அப்போ, ஒருநாள் இவர்தான், 'வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற ஒரே நூல் திருக்குறள்'னு சொன்னார்.

உடனே, ஜி.யு.போப் ஆங்கில உரையை எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். திருவள்ளுவர் ரெண்டே வரிகள்ல எல்லாத்தையும் கச்சிதமாக பேசிட்டுப் போறது ஆச்சரியமா இருந்துச்சு. படிக்கப் படிக்க எனக்குள்ள பிரமிப்பு எழுந்தது! எனக்கு லாட்விய மொழி தவிர சுவீடிஷ், ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம்னு நான்கு மொழிகள் தெரியும். இதில் லாட்விய மொழியிலதான் திருக்குறள் இன்னும் வரல.

அதனால, கண்டிப்பா எங்க மொழிக்கு திருக்குறளை கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேன். இப்போ, அறத்துப்பால் முடிச்சிட்டேன். இன்னும், நாலு மாசத்துல லாட்விய மொழியில திருக்குறள் இருக்கும்!'' என நம்பிக்கை கொடுக்கும் ஆஸ்ட்ராவுக்கும் கரிகாலனுக்கும் இரண்டு பெண் குழந்தைகள்... நர்மதா டயானா, கீர்த்தி. இருவரும் சென்னை பள்ளி ஒன்றில் படிக்கிறார்கள்.

மனைவியின் இந்த முயற்சி பற்றி சிலாகித்துத் தொடர்கிறார் கரிகாலன். இவர் இலங்கைத் தமிழர். ''நான் ஸ்கூல் படிச்சதெல்லாம் சென்னையிலதான். பி.இ படிக்க லாட்வியா போனேன். அங்கதான் ஆஸ்ட்ரா பழக்கமானாங்க. எங்க கல்யாணம் எந்த எதிர்ப்பும் இல்லாம முடிய காரணமே, அவங்களுக்கு தமிழ்நாடு மேல இருந்த மரியாதைதான்!'' என்கிறார் அவர்.

ஆஸ்ட்ரா சென்னையில் Spears School of Strategy and Managementஇல் பணிபுரிகிறார். இதன் நிறுவனரான பிரபாகரன், ஆஸ்ட்ராவின் திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு உதவி செய்கிறார். ''தமிழுக்கும் லாட்விய மொழிக்கும் உள்ள தொடர்பைப் பத்தி நிறைய விஷயங்கள் ஆஸ்ட்ரா பேசினப்போ, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. திருக்குறள்ல அவங்களுக்கு 'ஒழுக்கம்', 'ஊழ்', 'அடக்கம்' ஆகிய அதிகாரங்கள் மேல ஒருவித ஈர்ப்பு!

இப்போ, என்னாலான உதவிகளைச் செய்திட்டு இருக்கேன். சீக்கிரமே வௌியீட்டு விழா இருக்கும்!'' என்கிறார் பிரபாகரன் சிரித்தபடி! கண்டிப்பா எங்க மொழிக்கு திருக்குறளை கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேன். இப்போ அறத்துப்பால் முடிச்சிட்டேன்...

நன்றி: குங்குமம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக