Designed by Enthan Thamizh

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்.

இன்றைய கவிதை!.

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்.

விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்

சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்

உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை

திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!

உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு

பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு

மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை

விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!

அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு

உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு

உடமையெல்லாம் இழந்தாலும் –

எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்

மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி

காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி

யாரடிச்சு யார் மாண்டுபோயினும் – எவனடிச்சும் சாகா தமிழனுக்கு

எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!

பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்

அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்

வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்

திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்

சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!

உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து

மண்ணிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து

ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்

மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!

காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த

வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்

மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்

தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!

ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து

முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை

அடிமை அடிமை என்ற ஓர்சொல்

அடங்கமறுத்து அடங்கமறுத்து பெற்றது; சுதந்திரம்!

வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து

வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து

வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து

என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை

எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;

சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக