Designed by Enthan Thamizh

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி

ஓம் நமச்சிவாய.

மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது!

நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம், நம் செயல்திறன் என அனைத்தும் நம் சக்தியளவைப் பொறுத்துதான் அமைகிறது. மஹாசிவராத்திரி அன்று கண்விழித்து, முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், நம் சக்திநிலை உயர்கிறது. இதனால் ஆனந்தமான வாழ்க்கை மட்டுமல்ல, வேண்டி விரும்புவோருக்கு "முக்தி"யும் கூட சாத்தியமே!

மஹாசிவராத்திரி அன்று நிலவும் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி இழுக்கிறது. அன்றைய இரவு முழுவதும், முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது உயிர்சக்தி மேலெழும்ப உதவியாக இருக்கும். இல்லறம், துறவறம் என்ற வித்தியாசமின்றி, எல்லோருக்குமே இந்த இரவு நன்மை தரும். அவ்வளவு ஏன், நம் கலாச்சாரத்தில் பல யோகிகளும், முனிவர்களும் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். அத்தனை சக்திவாய்ந்த இரவு மஹாசிவராத்திரி!

சிவன் சக்திநிலையின் உச்சம். அந்த உச்சபட்ச சக்திநிலையை அடைய இந்த இரவு நமக்கு உதவுவதால், இது சிவராத்திரி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசைக்கு முந்தைய நாள், சிவராத்திரி. அந்த மாதத்திலேயே அதுதான் மிக இருளான இரவாக இருக்கும். ஒரு வருடத்தில் ஏற்படும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, பிற சிவராத்திரிகளை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கிறது. அதைத்தான் மஹாசிவராத்திரி என்கிறோம்.

இருள்
மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. சிவராத்திரி, மஹாசிவராத்திரி... இவையெல்லாம் இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன. இருள் என்ற வார்த்தையின் ஆழமான பொருள் "எது இல்லையோ அது." எது "இருக்கிறதோ" அது பிரபஞ்சம், அதுதான் படைத்தல். எது "இல்லையோ" அது சிவன்.

கண்திறந்து சுற்றிலும் பார்க்கும்போது, படைப்பின் பல அம்சங்கள் உங்களுக்குத் தென்பட்டால் உங்கள் கண்ணோட்டம் மிகக் குறுகியதாக் இருக்கிறதென அர்த்தம். உங்கள் நோக்கு உண்மையிலேயே விரிந்திருந்தால், இந்த பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் பரந்து விரிந்த வெறுமையை அல்லவா பார்ப்பீர்கள்! வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை பலரின் கவனத்திற்கு வருவதில்லை.

இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும் அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளேயே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்தப் பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, "மஹாதேவன்" என்று குறிப்பிடுகிறோம்.

எங்கும் பரவியிருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் இருள் அல்லது ஒன்றுமற்ற வெறுமை மட்டும்தான். பொதுவாக நல்வாழ்வை வேண்டும் மக்கள், தெய்வீகத்தை ஒளியாகப் பார்கிறார்கள். ஆனால், நல்வாழ்வையும் தாண்டி கரைந்து போக விரும்பும் மக்களுக்கு, அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும் இருளே தெய்வீகம்.

உலகின் முதிர்ச்சியற்ற மனங்கள் தான் இருளை தீயசக்தியாக சித்தரிக்கின்றன. உண்மையிலேயே "தெய்வீகம்" என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றென்றால், இயல்பாகவே நீங்கள் தெய்வீகத்தை இருளின் வடிவமாகத்தான் காணமுடியும். ஏனெனில், இருள்தான் எங்கும் பரவியிருக்கிறது. அது நிலைத்திருக்க யாரின் உதவியும் அதற்குத் தேவையில்லை.

"ஒளி" என்பது தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் ஒரு எரிபொருளில் இருந்து வருகிறது. அதற்கென்று ஒரு தொடக்கமும், முடிவும் இருக்கும். எரிபொருள் தீரும்போது ஒளியும் இல்லாமல் போகும். ஆனால், இருளுக்கு எந்த மூலமும் கிடையாது; அதற்கு அதுதான் மூலம். அது எங்கும் நிறைந்திருக்கும் தன்மை கொண்டது.

சிவன் எனும் இந்தப் பிரபஞ்சத்தின் பரந்துவிரிந்த வெறுமையின் மடியில்தான் இம்முழு படைப்பும் நிகழ்ந்திருக்கிறது. இந்த அருள் மடியை, சிவனை நாடித்தான் நம் கலாச்சாரத்தின் பிரார்த்தனைகள் அமைந்தன. நம் பழங்காலப் பிரார்த்தனைகள் பாதுகாப்பு கருதியோ, வளமான வாழ்க்கை நாடியோ செய்வதாக இருக்காது. "அனைத்திலும் உயர்ந்தவனே! என்னை அழித்து விடு! அப்போதுதான் நான் உன்னைப் போலாக முடியும்" என்பதுதான் நம் பிரார்த்தனையாய் இருந்தது.

எனவே, மாதத்தின் இருளான நாளாகிய இந்த சிவராத்திரி, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாடுகளை எல்லாம் கரைத்துவிட்டு, தன்னுடைய உருவாக்கத்துக்கு விதையான, படைப்பின் மூலமான, எல்லையற்ற தன்மையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பு!

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்தால், அவருக்குள் இயற்கையாகவே ஆன்மீகம் வளரும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக