தொடர்ச்சியாக சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்கும் நண்பர் ஒருவர் போனவாரம் திருச்சிக்கு அழைத்திருந்தார் .பரஸ்பரம் நலம் விசாரிப்புக்கு பின், சிறிது தூரம் பயணிக்கலாமா ? ஒரு அதிசயத்தை காண்பிக்கிறேன் என்றார் .சரி போகலாம் என்று புறப்பட்டேன் .அரைமணிநேர பயணத்திற்கு பின் சிலரிடம் விசாரித்து சாலை ஓரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த ஒற்றையடி பாதையில் நடக்க ஆரம்பித்தோம் .சிறிது தூரம் நடந்த பிறகு முற்றிலும் சிதிலமடைந்த கோவிலொன்று தெரிந்தது .இதில் என்ன அதிசயம் இருக்கும் என மனதில் எழுந்த கேள்வியை வெளிப்படுத்தாது அவரை தொடர்ந்தேன் .
அந்த இடிந்த கோவிலில் உள்ள அம்பாள் சிலை அருகே என்னை கொண்டு நிறுத்தினார் .நான் உங்களுக்கு காட்ட விரும்பிய அதிசயம் இது தான் என்றார் .மிக அழகான திரு உருவம், இரண்டு கரங்களிலும் தாமரை செண்டு ,இதழோரம் விரியும் புன்னகை என அற்புத தரிசனம் .ஆனால் இது அதிசயம் தானா ? மனதிற்குள் கேள்வி அப்படியே இருந்தது .என்னை அம்பாளின் அருகில் நிறுத்தி விட்டு எனது மகனும் நண்பரும் எதையோ தேடிக்கொண்டிருந்தனர் .இது சரியா இருக்குமா மாமா என்று அவரிடம்கொண்டு எதையோ கொடுத்தான் அவன் .எனக்கு ஆர்வம் தாளவில்லை .எனக்கு சொல்வதற்கு முன்னால் எதையோ எனது மகனிடம் சொல்லிவிட்டார் என்று மட்டும் புரிந்தது .ஒரு சிறிய மலர் கொத்தோடு வந்தார்கள் இருவரும் ,எனது கையில் கொடுத்து அம்பாளுக்கு மூக்குத்தி போல் அணிவிக்க சொன்னார் .அப்போது தான் கவனித்தேன் அம்பாளின் மூக்கில் துளை இருந்தது .துளையில் மலர் மூக்குத்தியை அணிவித்தேன் .அடடா என்ன அற்புதம் .எவ்வளவு திறன் படைத்த கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள்.இது எனது கண்களுக்கு மட்டும் தான் அதிசயமா ? இல்லை உங்களுக்குமா ?
#மலர்மூக்குத்தி👇🏼🌸🌸
0 கருத்துகள்:
கருத்துரையிடுக